மயில் இனிய விழா

ஏப்ரல் 2010

மாத இதழுக்கு 2010 மார்ச் முதல் நாள் ஓர் இனிய நாள்.  அன்று மயிலின் வெளியீட்டு விழா, தமிழ் சார்ந்த நிகழ்வுகளுக்குச் சங்கப் பலகையாய் இருந்து வரும் டான் ஸ்ரீ சோமா அரங்கில் நடைபெற்றது. வாசகர்கள், மாணவர்கள் கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் என மண்டபம் நிறைந்திருந்தனர்.

மயில் இனிய விழா

விழா தொடங்குவதற்கு முன்பே பார்வையற்ற கலைஞர் ரகுராமன் தம்முடைய இனிமையான குரலால் அரங்கை உயிர்ப்பித்துக் கொண்டிருந்தார். பாபு லோகநாதனின் தமிழ் வாழ்த்தோடு விழா தொடங்கியது. பூச்சோங் சுத்த சமாஜத்தின் தலைவர் டத்தின் பாதுகா அன்னை மங்களம் திருவிளக்கேற்றி விழாவை மங்களகரமாகத் தொடக்கி வைத்தார்.
மயில் இனிய விழா

மயிலின் இணை ஆசிரியர் எ. சகாதேவன், விழாவுக்கு வந்து இருந்தவர்களை வரவேற்றுப் பேசினார். மயிலின் ஆசிரியர் ஆ. சோதிநாதன், மயில் நல்லதோர் குடும்ப இதழாக - ஆறிலிருந்து நூறு வயதினருக்கும் உரிய இதழாக, கல்வி, கலை, இலக்கிய பண்பாட்டு இதழாக, ஒவ்வொருவருக்கும் பயன் நிறைந்த இதழாக வெளிவரும் என்று தமது ஏற்புரையில் கூறினார்.


மனிதவள அமைச்சர் டத்தோ டாக்டர் சுப்பிரமணியம், விழாவுக்குத் தலைமையேற்று, மயில் இதழை வெளியிட்டார். சமுதாயச் சிந்தனை உடைய இதழாக மயில் வெளிவர வேண்டும்; உண்மைகளை எடுத்து உரைக்கும் இதழாகவும் அது விளங்க வேண்டும்; மாணவர்களின் கல்வி முன்னேறத்திற்கு மயில் இதழ் துணை நிற்பதோடு, பொது அறிவுமிக்க கருத்துகளைத் தாங்கி அது வெளிவர வேண்டும். தமிழர்களின் சிந்தனை வளர்ச்சிக்கு மயில் இதழ் எப்போதும் துணை புரிய வேண்டும் என்று அமைச்சர் தமது தலைமையுரையில் கேட்டுக் கொண்டார்.

பேராசிரியர் முனைவர் என்.எஸ்.இராஜேந்திரன், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன்,  மலாக்கா தமிழர்ச் சங்கத் தலைவர் தொ.க.நாராயணசாமி, மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத் தலைவர் பெ.துரைசாமி ஆகியோர் மயில் இதழை வாழ்த்திப் பேசினர்.

மயில் இனிய விழா

எழுத்தாளர் டாக்டர் மா.சண்முகசிவா, மயிலுடனான தொடக்கக் கால அனுபவங்களையும், இப்போதைய தொடர்புகளையும், மயில் ஆற்றி வரும் இலக்கியப் பணிகளையும் தொட்டுப் பேசி, மார்ச் மாத இதழைப் பற்றிய அழகானதொரு மதிப்புரை வழங்கினார்.

‘அஸ்தானா” நடனக் குழுவின் மயில் நடனம் வந்திருந்தோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சொற்கொண்டல் சி.பாண்டித்துரை விழாவை வழிநடத்தினார். - அன்பு


1 comment:

  1. மயில் குடுமபத்தினருக்கு,
    வணக்கம்,
    இணையத் தளத்தைப் பற்றிய தங்களின் கருத்துகளைப் பெரிதும் எதிர்பார்க்கின்றேன்
    நன்றி.

    மலாக்கா முத்துக்கிருஷ்ணன்.

    ReplyDelete